துறையூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு
திருச்சி, ஏப்.27 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூர் பகுதியில் உள்ள காந்திநகர் காலனியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால், பொதுமக்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக துறையூர்–பெரம்பலூர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் மற்றும் பணிக்குச் செல்லும் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
தகவல் அறிந்து வந்த துறையூர் காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.