ஆட்டை மீட்க சென்ற சிறுமி கிணற்றில் தவறி விழுந்தார்: போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்

0 16
Stalin trichy visit

திருச்சி, மே 14  முசிறி அருகே ஆடு மேய்த்தபோது தவறி கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை மீட்க சென்ற சிறுமி கிணற்றில் விழுந்த சம்பவம் – செல்போனை வைத்து 7 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் தனுசியா (14) மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்போது பத்தாம் வகுப்பில் சேர்ந்துள்ளார். இந்தநிலையில் சிறுமி தனுசியா ஞாயிற்றுக்கிழமை மாலை காருகுடியில் இருந்து எம்.கருப்பம்பட்டி செல்லும் சாலையில் வயல்பகுதியில் ஆடுகளை மேய்க்க சென்றுள்ளார். பின்னர் இரவு நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அப்பகுதியில் பல இடங்களில் தேடியும் சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர்கள் தா.பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், தனிப்பிரிவு காவலர் செந்தில் உள்ளிட்ட பலர் சிறுமி கையில் வைத்திருந்த செல்போன் இருப்பிடம் கண்டறிவதற்காக நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செல்போன் இருப்பிடத்தை கண்டறிந்தபோது, அந்த சிறுமி ஆடுகளை மேய்க்க சென்றிருந்த பகுதியை காட்டியதால் போலீசார் மற்றும் பெற்றோர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்தப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்குள் சிறுமி தனுசியா திட்டில் நின்றவாரே தவித்து கொண்டிருந்தார்.

பின்னர் கிராம மக்கள் கிணற்றில் இறங்கி சிறுமியை மீட்பதற்காக முயற்சி செய்தனர். இருட்டு பகுதியாக இருந்ததால் கிணற்றுக்குள் இறங்க முடியாததால் முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முசிறி மீட்புபடை வீரர்கள் மின்விளக்குகள் பொருத்தி கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி சிறுமியை பாதுகாப்பாக கிணற்றில் இருந்து மேலே மீட்டு வந்தனர். இந்த மீட்பு பணியில் ஆட்டுக்குட்டியும் மீட்கப்பட்டது.

பின்னர் சிறுமியிடம் போலீசார் விசாரித்தபோது ஆடு மேய்த்த போது ஒரு ஆட்டுக்குட்டி தவறி கிணற்றில் விழுந்ததாகவும், அந்த ஆட்டுக்குட்டியை மீட்க சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றில் விழுந்து திட்டில் நின்று கொண்டதாகவும், கையில் வைத்திருந்த செல்போனும் தவறி கிணற்றுக்குள் விழுந்ததால் தகவல் தெரிவிக்க முடியாமல் பயத்துடன் இருந்ததாக சிறுமி தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிணற்றுக்குள் விழுந்த சிறுமியின் செல்போனை வைத்து 7 மணி நேரத்திற்குள் சிறுமியை மீட்ட தா.பேட்டை போலீசருக்கும், முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.