த.வெ.க. அமைச்சரவையில் இணைவது குறித்து நாளை முடிவு : காதர் மைதீன் பேட்டி

0 34
Stalin trichy visit

திருச்சி, மே 20 அமைச்சரவையில் இணைவது குறித்து நாளை நடைபெறும் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மைதீன் பேட்டி.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மைதீன், திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டி பேசினார். அதில்:–

​கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு, பாபநாசம் மற்றும வாணியம்பாடி ஆகிய இரு தொகுதிகளில் முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது. எனினும், தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைப் பெற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உருவானது.

​ஆளுநர் விதித்த கெடுவுக்குள் ஆட்சி அமைக்காவிட்டால், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி மூலமாக பாஜக மறைமுக ஆட்சி வந்துவிடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவியது. தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இயக்கமாக முஸ்லிம் லீக் இருப்பதால், சமுதாய மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, எவ்வித நிபந்தனையுமின்றி தவெக ஆட்சி அமைக்க முழு ஆதரவை வழங்கினோம்.
மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களைத் தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

​கடந்த 10 நாட்களாக தவெக நல்லாட்சியைத் தந்து வரும் நிலையில், முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் சேர வேண்டும் என்று தவெக தரப்பில் அதிகாரப்பூர்வமாக எங்களை அணுகியுள்ளனர்.

தவெக தலைவர் விஜய் தொலைபேசி மூலமாகவும் எங்களைத் தொடர்பு கொண்டார். மேலும், தவெக தரப்பில் அமைச்சர் ஆனந்த் மூலமாகவும் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்களது அலுவலகத்திற்கும் அவர்கள் வருகை தந்துள்ளனர்.

​அமைச்சரவையில் இணைவது குறித்து கேரளாவில் உள்ள கட்சியின் தேசிய அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவர் சையது சாதிக் அலி சியாப் தலைமையில் இன்று காலை ஆலோசனை நடத்தப்பட்டது. தேசிய தலைமை இதற்கு எவ்வித நிபந்தனையுமின்றி பச்சைக்கொடி காட்டியுள்ளது. ​இதனைத் தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழக முஸ்லிம் லீகின் மாநில உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விரிவாக அலசி ஆராய்ந்து, அமைச்சரவையில் இணைவது மற்றும் எத்தனை அமைச்சர் பதவிகள் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு அரசுக்குத் தெரிவிக்கப்படும்.

​இந்த அழைப்பு குறித்து கூட்டணித் தலைவர் ஸ்டாலினிடம் பேசவில்லை. தவெக-விற்கு ஆதரவு அளிப்பதற்கு முன்பு வேண்டுமானால் ஆலோசனை செய்திருக்கலாம். ஆனால், ஆதரவு அளித்த பிறகு இது குறித்துப் பேச வேண்டிய சூழல் எழவில்லை.

​அமைச்சரவையில் சேரக் கூடாது என கூட்டணி கட்சியினர் சொல்ல முடியாது. கூட்டணி என்பது வேறு விஷயம். இது குறித்து நாங்கள் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. நாளை காலை 11 மணிக்கு நடக்கும் கூட்டத்தில்தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்.

​அதிமுக-வில் இருந்து பிரிந்து வரும் எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை என திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு?

அது குறித்து நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை, தலையிடவும் விரும்பவில்லை. அது தவெக மற்றும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.