புஞ்சை சஞ்சேந்தி அய்யனார் கோவில் வைகாசி தேரோட்ட விழா
திருச்சி, மே 29 திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பு.சங்கேந்தி கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ பூரண புஷ்பகலா சமேத ஹரிஹர புத்ர சுவாமி அய்யனார் மற்றும் துரை கருப்புசாமி,18ஆம் படி கருப்பு, மதுரவீரன் சாமி ஆலய வைகாசி விசாக தேர் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 20 ஆம் தேதி காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அன்று இரவு முதல் நேற்று முன்தினம் 27 தேதி வரை சாமி அன்னம், சிம்மம்,மயில்,ரிஷபம், திருக்கல்யாண கேடயம், யானை,பூதம் மற்றும் குதிரை வாகனங்களில் இரவு திருவீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் விழாவின் சிகர நிகழ்வாக அய்யனார் சாமி சிலை தாங்கிய தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் பு.சங்கேந்தி, சந்திவீரப்பபுரம், அய்யனார்புரம்,புள்ளம்பாடி, இ.வெள்ளனூர் உள்ளிட்ட குடிப்பாட்டு மக்கள், வழிபாட்டு மக்கள் என பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.இன்று 29ஆம் தேதி சாமிக்கு தீர்த்தவாரியுடன் மஞ்சள் நீர் கேடயத்தில் திருவீதியுலாவும், நாளை இரவு 9 மணியளவில் தங்க பல்லாக்கு,முத்துபல்லக்கில் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலாவும் நடைபெறும்.
முடிவில் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சாமிக்கு விடையாற்றியுடன் திருவிழா நிறைவு பெறும். விழாவையொட்டி ஆலயம் மற்றும் கிராமம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரித்து இருந்தனர்.ஆங்காங்கு பக்தர்களுக்கு நீர்,மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி இரவு இன்னிசை கச்சேரிகள், வாணவேடிக்கைகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள்,கோவில் குடிப்பாட்டு மக்கள், பொதுமக்கள்,இளைஞர்கள் செய்திருந்தனர்.