முசிறியில் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் : எம்.எல்.ஏ. விக்னேஷ் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜூன் 22 முசிறியில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் துவக்கி வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் முசிறியில் அக்கட்சியின் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம்நேற்று நடைபெற்றது.
முசிறியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
முசிறி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமில், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். மணப்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து, ரத்தத்தை சேகரித்தனர்.
இந்த இரு நிகழ்வுகளையும் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் தலைமை வகித்துத் துவக்கி வைத்தார். திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் ஜெகன் மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.
பல்வேறு சமூக நலப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தினரின் இந்தச் செயல்பாட்டிற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.