திருவெறும்பூரில் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி பிஎன்ஜி இணைப்பை திணிப்பதாக புகார்

0 43
Stalin trichy visit

திருச்சி, நவ. 23 திருவெறும்பூரில் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி பிஎன்ஜி இணைப்பை திணிப்பதாக புகார்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் எல்பிஜி சிலிண்டர் இணைப்புகள் முடக்கப்பட்டு, பிஎன்ஜி இணைப்பை வலுக்கட்டாயமாக எடுக்க நிர்ப்பந்திப்பதாக எழுந்த புகார் தொடர்பாக இன்று திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் உள்ள சாலைகளையும், குடிநீர் குழாய்களையும் ஐஆர்எம் கேஸ் நிறுவனம் சேதப்படுத்தி பிஎன்ஜி குழாய்கள் பதித்தது. ஆனால் இதுவரை அந்தச் சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படவில்லை.
இந்நிலையில், பிஎன்ஜி இணைப்பை விரும்பாத பலர் தொடர்ந்து எல்பிஜி சிலிண்டர்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் குறைவாக உள்ள நிலையில் டெபாசிட் செலுத்தி பிஎன்ஜி இணைப்பைப் பெற மக்களை வலுக்கட்டாயப்படுத்துகின்றனர். பிஎன்ஜி இணைப்பை விரும்பாத வீடுகளுக்கு எல்பிஜி கேஸ் விநியோகம் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பு பல வீடுகளின் சிலிண்டர்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கடிதம் அனுப்பப்பட்டது. இதனால் தீபாவளி நேரத்தில் பலகாரம் கூட செய்ய முடியாமல் கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எல்பிஜி இணைப்பை முடக்க யாருக்கு அதிகாரம் உள்ளது? தடை மற்றும் பராமரிப்பு காலங்களில் தடையின்றி கேஸ் விநியோகிக்க முடியுமா? வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இது எப்படி சாத்தியமாகும்? எல்பிஜி இணைப்பை ரத்து செய்யாமல் பிஎன்ஜி இணைப்பைப் பெற முடியுமா?
மேலும் எல்பிஜி இணைப்பிற்கான மானியம் தடைபடுவதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பிஎன்ஜி குழாயின் அளவு சிறியதாக இருப்பதால் ஒரு மணி நேரம் சமைக்கும் உணவு சுமார் ஒன்றரை மணி நேரமாக அதிகரிக்கிறது. எனவே, எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை பழைய முறையில் மீண்டும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததாக தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.