திருச்சியில் ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
திருச்சி, ஜூன் 24 டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வு; திருச்சியில் ஜேசிபி உரிமையாளர்கள் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம்
டீசல், ஆயில், உதிரி பாகங்கள் மற்றும் இன்சூரன்ஸ் கட்டண உயர்வைக் கண்டித்தும், ஜேசிபி வாகனங்களின் வாடகையை உயர்த்தக் கோரியும் தமிழகம் முழுவதும் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முதல் மூன்று நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் சஞ்சீவி நகர் பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்து, இரண்டாவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச் சங்கத் தலைவர் மஞ்சுநாதன், செய்தியாளர்களிடம் பேசுகையில்:–
கடந்த சில ஆண்டுகளில் ஜேசிபி வாகனத்தின் விலை ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 41 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல், ஆயில், கிரீஸ் மற்றும் உதிரிபாகங்களின் விலையும் இருமடங்காக அதிகரித்துள்ளது.
ஓட்டுநர்களின் சம்பளம் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், எங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வாடகையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட சங்கங்களின் ஆலோசனையின்படி, ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,000 மற்றும் 2 மணி நேரத்திற்கு ரூ. 4,500 (ஓட்டுநர் படி உட்பட) என வாடகையை உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
தனிநபர்கள் மூலம் பெறப்படும் பர்மிட் ஆவணங்களில் ஏற்படும் குளறுபடிகளால், வாடகைக்குச் செல்லும் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தேவையின்றி காவல்துறையினரால் கைது செய்யப்படுவது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
ஏரி, குளம் தூர்வாரும் பணிகள் மற்றும் சாலை ஒப்பந்தப் பணிகளை அரசியல் பிரமுகர்களுக்கோ, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கோ வழங்காமல், தங்களைப் போன்ற உள்ளூர் உரிமையாளர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும். கிராவல் குவாரிகளைத் தனியாரிடம் ஒப்படைக்காமல், அரசாங்கமே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும். 15 ஆண்டுகால லைஃப் டேக்ஸ் முறைக்கு பதிலாக, பழைய முறையிலான வருடாந்திர வரி முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
இது குறித்து தமிழக அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் முதலமைச்சரை நேரில் சந்தித்துத் தங்களது கோரிக்கைகளை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளோம். அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காவிட்டால், இந்த அடையாள வேலைநிறுத்தம் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டமாக மாறும் என தெரிவித்தார்.