தந்தை – மகனை அரிவாளால் வெட்டியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் குடும்பத்தினர் புகார்
திருச்சி, ஜூலை 2 தந்தை, மகன் மீது அரிவாள் வெட்டு; குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் குடும்பத்தினர் புகார்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கைனாங்கரை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரிக்கண்ணு (வயது 43). இவர் தனது மகன் புவனேஸ்வரனுடன் இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–
எங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் தீக்குச்சி பால்ராஜ் என்பவருக்கும், எங்களுக்கும் பாதை தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்றம் மூலம் தீர்வு பெற்று, நாங்கள் அந்த பாதையை அனுபவித்து வருகிறோம். இந்த முன்விரோதம் காரணமாக, கடந்த 27-ம் தேதி எனது மூத்த மகன் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, தீக்குச்சி பால்ராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது எனது மகன் தலையில் கல்லால் தாக்கி காயப்படுத்தினர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக புகார் அளிக்க, எனது கணவர் வேல்முருகன் மற்றும் இளைய மகன் பாலகிருஷ்ணன் ஆகியோர் சென்ற போது, சம்பந்தப்பட்ட கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் திடீரென அவர்களை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.
இந்தக் கொடூரத் தாக்குதல் குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் ஒருவரை மட்டுமே போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். கொலை வெறி தாக்குதல் நடத்திய மற்ற மூன்று பேரையும் போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.
எனவே, தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேரையும் உடனடியாகக் கைது செய்து, அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்