ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி டைமண்ட் சிட்டி சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்!

0 17
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 1  மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ரத்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கிலும், ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி டைமண்ட் சிட்டி மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து  ரத்ததான  முகாம் நடத்தினர்.

திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள இன்று தொடங்கிய இந்த சிறப்பு ரத்ததான முகாம், தொடர்ந்து 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. ஜூலை மூன்றாம் தேதி அன்று பிஹெச்எல் டவுன்ஷிப் பகுதியில் முகாம் நடைபெற உள்ளது. ரத்ததானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முகாமில், பல்வேறு தரப்பினர் ஆர்வமுடன் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கி வருகின்றனர்.

இந்த முகாமை ரோட்டரி சங்கத்தின் கவர்னர் மணி இன்று காலை தொடங்கி வைத்தார். நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், அவரே முன்னுதாரணமாகத் திகழும் வகையில் ரத்ததானம் செய்து முகாமினைத் தொடங்கி வைத்தது அங்கிருந்தவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிகழ்வில் காவேரி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செந்தில்வேல் முருகன் கலந்துகொண்டு ரத்ததானத்தின் மருத்துவ முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். அவருடன் ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை அளித்தனர்.

தற்போது அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் ரத்தத்தின் அளவை ஈடுகட்ட இது போன்ற முகாம்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மருத்துவர்கள் தினத்தில் இத்தகைய மனிதாபிமான செயலில் ஈடுபடுவது, மருத்துவர்களின் சேவையைப் போற்றும் வகையில் அமைந்திருப்பதாகக் கருதி, பொதுமக்கள் ஆர்வத்துடன் இதில் பங்கேற்று வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி ரத்ததானம் செய்யுமாறு ரோட்டரி கிளப் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.