தீண்டாமையில்லாத சமூக நல்லிணக்க ஊராட்சிக்கு விருது

0 29
Stalin trichy visit

திருச்சி, ஆக.17 திருச்சி மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத ஊராட்சியாக போசம்பட்டி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், மாவட்டம் தோறும் தீண்டாமையை கடைப்பிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்தை காக்கும் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு,அந்த கிராமத்துக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி கிராமத்தை தேர்வு செய்வதற்கு 8 வழிமுறைகளும், ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும் செயல்பட்டு வருகிறது. கிராமத்தில் உள்ள பொது மயானத்தை அனைவரும் பயன்படுத்தி வர வேண்டும்.

பொதுக்கிணறுகளில் அனைத்து சமுதாயத்தினரும் தண்ணீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். கோயில்களில் நடைபெறும் விழாக்களில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொள்ள வேண்டும். இதர இனமக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் விழாக்களுக்கு ஆதிதிராவிடர் மக்களை அழைக்க வேண்டும். அதேபோல் ஆதிதிராவிடர் மக்கள் இல்ல விழாக்களில் இதர இனமக்கள் கலந்து கொள்ள வேண்டும். சம்பந் தப்பட்ட கிராமத்தில் தீண்டாமை மற்றும் மதசார்புடைய வழக்குகள் ஏதும் காவல்துறை ஆவணங்களில் இல்லை என்ற விவரம் பெற வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை கடைப்பிடிக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.
இதன்படி, இந்தாண்டுக்கான தீண்டாமையை கடைப்பிடிக்காத ஊராட்சியாக, அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட போசம்பட்டி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, போசம்பட்டி ஊராட்சி செயலர் பொன்னர் ஆகியோரிடம், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் பிரத்திக் தாயள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அடுத்த ஓராண்டுக்கு இந்த கிராமத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு தனியாக முன் னுரிமை அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பாலாஜி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இலக்கியா, மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் ரங்கராஜன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சொக்கநாதன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அமுதா, தமிழ் ஆய்வுக்குழு அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரஞ்சித், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.