லால்குடியில் வெறி நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு
திருச்சி, ஆக. 31 திருச்சி மாவட்டம், லால்குடி நாகம்மையார் தெருவைச் சேர்ந்தவர்கள் சந்திரன், தவமணி. இவர்கள் 10-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் ஆட்டுக் கொட்டகையில் ஆடுகளை அடைத்துவிட்டு அருகில் உள்ள வீட்டில் தூங்கி உள்ளனர். காலையில் எழுந்து ஆட்டுக் கொட்டைக்கு வந்த போது நாய்கள் ஆடுகளை கடித்துக்கொன்றுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் செத்தன. 4 ஆடுகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலா வீட்டில் மொட்டை மாடியில் கட்டியிருந்த 4 ஆடுகளை நாய்கள் கடித்ததால் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். எனவே நாய்களைப் பிடிக்க வேண்டும் என்றும், நாய்கள் கடித்து இறந்த ஆடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.