மன்னார்புரத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி
திருச்சி, ஆக.31 திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து மன்னாார்புரம் பஸ் நிறுத்தம் பரபரப்பான பகுதியாக மாறியது.
திருச்சியிலிருந்து தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல கருமண்டபம், காஜாமலை, கே.கே.நகர், சுப்பிரமணியபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் மன்னாார்புரம் சந்திப்பிலிருந்தே பஸ் ஏறி சென்று வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட காலமாக முறையான பயணிகள் நிழற்குடை இல்லாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, கடந்த மார்ச் மாதம் ரூ. 60 லட்சத்தில் இங்கு புதிய பஸ் நிழற்குடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வேலை நடந்து வருவதால் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கின்றனர். மேலும் அங்குள்ள மரங்களின் நிழல்களிலும், தேசிய நெடுஞ்சாலையோரம் ஆபத்தான முறையில் நின்று பஸ்களில் ஏறி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் அணுகுசாலை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதால், வாகன போக்குவரத்து நெருசல் காணப்படுகிறது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், போக்குவரத்து மிகுந்த இந்த பகுதியில் பஸ் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தற்போது புதிய பஸ் நிழற்குடை கட்டும் பணியை விரைவில் முடித்து பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.