புறநகர் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் : தனியார் பேருந்து ஓட்டுநர்கள் எதிர்ப்பு
திருச்சி, ஆக.31 புறநகர் இலவச பேருந்து திட்டத்திற்கு திருச்சியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு. 50,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி-
தமிழக சட்டப்பேரவையில் அக்டோபர் 2 முதல் புறநகர பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல பேருந்து உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் நிர்வாகி ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்..
அரசின் இந்த திட்டத்தால் பேருந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் கிளீனர்கள் என அனைவரது வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும். ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதும் சுமார் 50,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகும். எனவே, அரசு இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அல்லது டீசல் மானியம், வரி விலக்கு,குறைப்பு போன்ற மாற்று வழிகளில் தனியார் பேருந்துத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாவிட்டால் பேருந்துகளை இயக்க முடியாமல் நிறுத்தும் நிலை ஏற்படும்.
திருச்சியில் மட்டும் சுமார் 120 நகர,புறநகரத் தனியார் பேருந்துகள் இயங்கி வரும் நிலையில், இதனால் பெரும் இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.