நகராத நகரும் படிக்கட்டுகள் – குளுகுளு வசதி தராத குளிர்சாதனம்: பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் பரிதவிக்கும் பயணிகள்
திருச்சி, செப்.11திருச்சி நகரில் நிலவிவரும் போக்குவரத்து நெருக்கடி பிரச்சினையை தீர்ப்பதற்காக பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் 38 ஏக்கர் பரப்பளவில் ரூ.246 கோடி திட்ட மதிப்பில் கட்டபட்டது. இந்த ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கடந்த 9.5.2025 அன்று திறப்பு விழா காணப்பட்டு, 16.7.2025 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.
விமான நிலையத்திற்கு நிகராக நவீன வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. பஸ்நிறுத்தும் இடங்கள், நடைமேடைகள் தவிர கடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், பொதுமக்கள் நடமாடும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முற்றிலும் குளிர்பாதன வசதி செய்யப்பட்டு இருந்தது.
தமிழக அளவில் குளிர்பாதன வசதி செய்யப்பட்ட ஒரே பஸ் நிலையம் என்ற பெருமையையும் பெற்றது.மேலும் பயணிகளின் வசதிக்காக தரைதளத்தில் இருந்து டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் முதல் தளம் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமான தரை கீழ் தளத்திற்கு (அண்டர் கிரவுண்டு) பயணிகள் எளிதாக செல்வதற்கு வசதியாக 6 இடங்களில் மின் தூக்கிகள் (லிப்ட்), 6 இடங்களில் நகரும் படிக்கட்டுகளும் (எஸ்கலேட்டர்) அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் இந்த பஸ் நிலையத்தில் தற்போது குளிர்பாதன வசதி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் இந்த ஆண்டு கோடை காலத்திற்கென தற்போது வெயில் கொளுத்தி வருவதால் பஞ்சப்பூர் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிடைந்து வருகிறார்கள். காப்புப் பகுதியில் மின் விசிறி வசதிகளும் இல்லாத நிலையில், வெயிலின் தாக்கத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் சில மாதங்கள் இரவு, பகல் என்ற பாகுபாடு இன்றி குளிர்பாதன கருவிகள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அவை திடீர் என நிறுத்தப்பட்டது ஏன்? என தெரியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் கடை நடத்தி வரும் சில வியாபாரிகள் கூறுகையில், அமைச்சர் அல்லது கலெக்டர் போன்ற முக்கிய அதிகாரிகள் வரும் நேரங்களில் மட்டுமே குளிர்பாதன வசதி செய்யப்படுகிறது. மற்ற நேரங்களில் ஏ.சி. கருவிகள் இயக்கப்படுவது இல்லை, என்றனர்.
இதுபோல் எஸ்கலேட்டர்களும் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மூட்டை, முடிச்சுகளுடன் குடும்பத்துடன் வரும் வெளியூர் பயணிகள் டவுன் பஸ்களை பிடிப்பதற்கு முதல் தளத்திற்கு தங்களது பைகள் உள்ளிட்டவற்றை தூக்கிச் செல்வதற்கு முடியாமலும், மேல் தளத்தில் இருந்து தரைதளத்திற்கு இறங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், விமான நிலையத்திற்கு நிகராக பஞ்சப்பூர் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்கள். ஆனால் இங்கு ரயில் நிலையத்தில் இருப்பது போன்ற எஸ்கலேட்டர்கள் இருந்தும் கூட, அவை இயக்கப்படுவது இல்லை.
அனைத்து பஸ்களும் தரைதளத்தில் இருந்து இயக்கப்பட்ட பிரச்சினைவே இல்லை. ஆனால் நீண்டதூரத்தில் இருந்து வரும் பஸ்சில்தான் தரைதளத்தில் நிறுத்தப்படுகின்றன. அவற்றில் வரும் பயணிகள், திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால், மேல்தளத்திற்கு சென்று அங்கு நிறுத்தப்படும் டவுன் பஸ்களில்தான் செல்ல வேண்டும். இதனால் லக்கேஜ்களை தூக்கிக்கொண்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமமாக உள்ளது. குறிப்பாக முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர், என்றனர்.
246 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் கட்டப்பட்ட பஞ்சப்பூர் பஸ் நிலையத்தின் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை என்பதால், அதன் பராமரிப்புப்பணிகள் முழுவதும் தனியார்மடை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் ஒரு கோடி ரூபாயை தாண்டியதால் குளிர்பாதன வசதி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மீண்டும் குளிர்பாதன வசதியை ஏற்படுத்துவதோடு, எஸ்கலேட்டர்களையும் தொடர்ந்து இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.