வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7½ லட்சம் மோசடி செய்தவர் கைது
திருச்சி, செப்.11 வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ.7½ லட்சம் மோசடி: திருச்சியை சேர்ந்தவர் அதிரடி கைது
தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே ரெகுராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். கார் டிரைவர். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருச்சி கே.கே. நகரை சேர்ந்த சுமேஷ் என்பவர் அறிமுகமானார்.
அப்போது அவர், தான் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், ரஷ்யாவுக்கு டிரைவர் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், அதற்கு ரூ.2½ லட்சம் தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாரியப்பன், தனது உறவினரான புதூர் அருகே செங்கோட்டையை சேர்ந்த மாதவராஜ், வடக்கு முத்தையாபுரத்தைச் சேர்ந்த நண்பர் ரங்கராஜ் ஆகியோரிடம் தெரிவித்து, தலா ரூ.2½ லட்சம் என ரூ.7½ லட்சத்தை டிரைவர் வேலைக்காக சுமேஷிடம் கடந்த பிப்ரவரி மாதம் கொடுத்தனர்.
கடந்த ஏப்ரல் இறுதியில் சுமேஷ் கூறியபடி மாரியப்பனும், சுமே்சை நம்பி பணம் கொடுத்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளவரசன் என்பவரும் மும்பை சென்று தங்கினர். ஆனால் ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டதால், செலவுக்கு பணமில்லாமல் மாரியப்பனும், இளவரசனும் அங்குள்ள ஒரு டக்கடையில் ரூ.100 தினக்கூலிக்கு வேலை பார்த்தனர்.
ஜூன் மாதம் முதல் வாரத்தில் சுமே்சை தொடர்புகொண்டபோது அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த மாதம் மாரியப்பன் உள்ளிட்ட 3 பேரும் திருச்சி டி.ஐ.ஜி.யிடம் புகார் அளித்தனர். அவர், அந்த புகார் மனுவை தூத்துக்குடி மாவட்டம் புதூர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றினார்.
இதன்பேரில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி நிலையில் மதுரையில் பதுங்கியிருந்த சுமேஷ்சை நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.