திருச்சியில் கொட்டி தீர்த்த கனமழை : மேலப்புதூர் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய நீரில் சிக்கிய அரசு பேருந்து
திருச்சி, அக்.24 திருச்சியில் கொட்டி தீர்த்த கனமழை – மேலப்புதூர் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய நீரில் சிக்கிய அரசு பேருந்து.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வந்த நிலையில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக மாநகர பகுதிகளான கண்டோன்மென்ட், உறையூர், தென்னூர், புத்தூர், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், கே.கே. நகர், தில்லை நகர், மேலப்புதூர் மற்றும் புறநகர்ப் பகுதிகளான மணிகண்டம், தீரன் நகர், வண்ணான்கோயில், சத்திரப்பட்டி, குண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த மழை தீவிரமாக இருந்தது.
இதன் காரணமாக மாநகரின் பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் தீவிரத்தால் திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் முழங்கால் அளவுக்கு மேல் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதைக்கு திருப்பி விடப்பட்டன. இதனிடையே, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று, தேங்கி நின்ற நீரின் ஆழம் தெரியாமல் சுரங்கப் பாதைக்குள் இறங்கியது. அப்போது என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பேருந்து வெளியே வர முடியாமல் நடுவழியில் பழுதாகி நின்றது. உடனடியாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பத்திரமாகக் கீழே இறக்கி விடப்பட்டனர். தொடர்ந்து, சுரங்கப் பாதையில் நின்ற அரசுப் பேருந்தை மீட்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்களும், காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திடீரென பெய்த இந்த கனமழையால் மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.