திருச்சியில் ரூ.25 கோடி மோசடி செய்து தப்பியோடிய பர்னிச்சர் கடை உரிமையாளர் : பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையரிடம் புகார்

0 33
Stalin trichy visit

திருச்சி, நவ.18 திருச்சி கே.கே. நகரில் ரூ. 25 கோடி மோசடி செய்துவிட்டு குடும்பத்துடன் தப்பியோடிய ஃபர்னிச்சர் கடை உரிமையாளர்- பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையரிடம் புகார்

திருச்சி கே.கே.நகர் பகுதியில் ஃபர்னிச்சர் மற்றும் ஹோம் அப்ளையன்ஸ் கடை நடத்தி வந்த உரிமையாளர் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் சுமார் ரூ. 25 கோடி வரை முதலீடு பெற்றுவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.கே.நகரில் சமீர் அலி என்பவர் மஞ்சில் கார்ட் என்ற பெயரில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஃபர்னிச்சர் கடை நடத்தி வந்துள்ளார். இக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நைசாகப் பேச்சுக் கொடுத்து தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபத்தில் பங்கு தருவதாகக் கூறி அவர் நம்ப வைத்துள்ளார்.

இதை நம்பி 100-க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் அவர் கூறியபடி லாபப் பங்கையோ அல்லது முதலீடு செய்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார். கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் பணம் வாங்கிய உரிமையாளர்கள் ஜூலை மாதத்திற்குள் கடையை பூட்டிவிட்டுத் தலைமறைவு ஆகிவிட்டார். தற்போது
தலைமறைவாகியுள்ள சமீர் அலி கேரளாவில் பதுங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களது மோசடி தொடர்பாக ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், இளஞ்செழியன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் தங்களுக்கு வர வேண்டிய ரூ. 61 லட்சம் உட்பட ஒட்டுமொத்த தொகையையும் மீட்டுத் தருமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுவரை சுமார் 100 பேரை ஏமாற்றி ஏறக்குறைய ரூ. 25 கோடி வரை இந்த மோசடி நடந்துள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள உரிமையாளரைக் கண்டுபிடித்துத் தங்களின் வாழ்வாதாரப் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.