குமுளூர் வேளாண் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு இலவச தாவரவியல் அகராதிகள் வழங்கல்

0 13
Stalin trichy visit

திருச்சி, நவ. 26 குமுளூர் வேளாண் கல்வி நிறுவனத்தில் 125 மாணவர்களுக்கு இலவச தாவரவியல் அகராதிகள் வழங்கும் விழா

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை கல்வி நிறுவனத்தில், இளங்கலை வேளாண்மை மாணவர்களின் அறிவியல் அறிவு மற்றும் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில் இலவச தாவரவியல் அகராதி வழங்கும் விழா  நேற்று (நவ.25) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் இணைப் பேராசிரியர் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர்  முனைவர் ஜெ. கோகுலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் மு. அசோகன் தலைமையுரையாற்றி, மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தையும், அறிவியல் அறிவை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் ஓய்வுபெற்ற இணைப் பேராசிரியர் முனைவர். எஸ். கலா , சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற வேளாண்மைத் துறை துணை இயக்குநர்  மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இருவரையும் கல்லூரி முதல்வர் முனைவர். மு. அசோகன் கௌரவித்தார்.

நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, சிறப்பு விருந்தினர் முனைவர். எஸ். கலா  இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவர்களுக்கு 125 தாவரவியல் அகராதிகளை இலவசமாக வழங்கினார். தாவரவியல் அறிவியல் சொற்கள், தாவரங்களின் பெயர்கள், தாவர இனப்பெருக்கம் மற்றும் தாவரங்களின் பல்வேறு உயிரியல் செயல்பாடுகளை எளிதில் புரிந்து கொள்ள இவ்வகராதிகள் பெரிதும் உதவும் எனக் குறிப்பிடப்பட்டது.

சிறப்பு விருந்தினர் எஸ்.கலா பேசுகையில்,  தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை நடத்தைகள், மகரந்தச் சேர்க்கையில் பூச்சிகளின் பங்களிப்பு, உலகளாவிய வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் மற்றும் அவை வேளாண்மையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து விளக்கினார். மேலும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் வேளாண் மாணவர்கள் அறிவியல் சிந்தனையுடன் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

“நாம் விதைப்பதையே அறுவடை செய்கிறோம்” என்ற உயரிய கருத்தை வலியுறுத்திய அவர், நமது உடல்நலம் மற்றும் வாழ்க்கையின் தரம் ஆகியவை அன்றாடம் நாம் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் மற்றும் தேர்வுகளின் விளைவுகளே என விளக்கினார். ஒழுக்கம், கடின உழைப்பு, நேர மேலாண்மை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவையே வெற்றியின் ரகசியங்கள் என்றும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார்.

அகராதிகளைப் பெற்றுக்கொண்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு வேளாண் மாணவர்கள் சார்பாக ஐந்து மாணவர்கள் ஏற்புரையாற்றி, இத்தகைய பயனுள்ள கல்வி உதவியை வழங்கிய சிறப்பு விருந்தினருக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.
இறுதியாக, முனைவர். இரா. வினோத், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நூலகப் பொறுப்பாளர் நன்றி கூறினார்.

“புத்தகங்கள் அறிவை வளர்க்கும்; அறிவு எதிர்காலத்தை உருவாக்கும்” என்ற நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தையும் அறிவியல் ஆர்வத்தையும் மேம்படுத்தும் சிறந்த முன்னெடுப்பாக அமைந்தது.

Leave A Reply

Your email address will not be published.