திருமஞ்சன காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி தொடக்கம்
திருச்சி, நவ. 26 பாரம்பரிய நீர்வழித்தடத்தை மீட்கும் முயற்சி: திருமஞ்சன காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி தொடக்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதப் பெருமாளின் புனிதப் பணிகளுக்கும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதாரமாக விளங்கிய பாரம்பரிய ‘திருமஞ்சன காவிரி ஆற்றை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணிகள், மாவட்ட நிர்வாகம், திருச்சி மாநகராட்சி நிர்வாகம், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பில் தொடங்கப்பட்டுள்ளன.
திருச்சி காவிரியாற்றின் முக்கொம்பு மேலணைக்கு அடுத்த கரைப் பகுதியிலிருந்து பிரிந்து, ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் வழியாகப் பாய்வது திருமஞ்சன காவிரி ஆகும். கங்கைக்கு இணையான புனிதத்தன்மை கொண்ட காவிரியிலிருந்து, யானை மீது தங்கக் குடத்தில் நீர் எடுத்து வரப்பட்டு அரங்கநாதருக்கு விசேஷ திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுவது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.
பெருமாளின் தினசரி அபிஷேகம் மட்டுமின்றி, ராமர் தீர்த்தத் தெப்பக்குளத்திற்கு நீர் நிரப்பவும், சுற்றுவட்டார விளைநிலங்களின் பாசனத்திற்கும், நிலத்தடி நீர்மட்டத்தைத் தக்கவைக்கவும் இந்த நீரோடையே பிரதான ஆதாரமாக இருந்து வந்தது.
காலப்போக்கில் ஏற்பட்ட நகரமயமாக்கல் மற்றும் ஸ்ரீரங்கத்தின் பாரம்பரியப் புனிதத்தன்மையைக் காக்கக் கோயிலைச் சுற்றிப் பாதாளச் சாக்கடைகள் அமைப்பதில் நிலவிய எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால், காவிரி, கொள்ளிடம் மற்றும் திருமஞ்சன காவிரி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் சூழல் உருவானது.
இதனால், ஒருகாலத்தில் பெருமாளின் திருமஞ்சனத்திற்குப் பயன்பட்ட இந்தப் புனித நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தப் பாரம்பரிய நீர்வழித்தடத்தின் பழைய பொலிவை மீண்டும் கொண்டு வரும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சென்னை ஐஐடிஎம் பிரவர்த்தக் (IITM Pravartak) உள்ளிட்ட அமைப்பினர் இணைந்து சீரமைப்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன் முதற்கட்டமாக, திருமஞ்சன காவிரியின் ஸ்ரீரங்கம் படித்துறைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டு, பாரம்பரிய முறைப்படி விளக்கேற்றி வழிபாடு நடத்திய பின்னர் தூர்வாரும் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகள் முறைப்படி தொடங்கப்பட்டன.
அரசு நிர்வாகமும் தன்னார்வலர்களும் கைகோர்த்துள்ள இந்த முயற்சிக்குப் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.