உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் குறித்த விழிப்புணர்வு பேரணி

0 9
Stalin trichy visit

திருச்சியில் உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் குறித்த விழிப்புணர்வு பேரணி – மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலைத் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் தற்கொலை இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் கருதி பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கல்லூரியில் செயல்பட்டு வரும் Lifeline and Mental Well-being Club, Deanery of Extension Activities, Centre for Mental Health and Emotional Well-being, NSS, NCC, Youth Against Drug Club மற்றும் Youth Red Cross ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைத்து நடத்திய இந்த விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து பிரச்சார நிகழ்வுக்கு கல்லூரியின் விரிவாக்கத் துறைத் தலைவர் முனைவர் வி. ஆனந்த் கிதியோன் தலைமை வகித்தார். டேவிட் சாம் பால் வரவேற்புரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக ஆத்மா மருத்துவமனை உளவியலாளர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் சவுந்தர் கலந்து கொண்டு, உலக தற்கொலை தடுப்பு தினத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் தற்கொலை தடுப்பு உறுதிமொழி வாசிக்கப்பட, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து, விரிவாக்கத் துறைத் தலைவர் ஆனந்த் கிதியோன் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்தார்.
கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி பெரியார் மாளிகை மற்றும் புத்தூர் நால்ரோடு வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. இதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் காலை 11 மணியளவில் தற்கொலை தடுப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். மாணவ ஆலோசகர் திருமதி தேவசேனா வரவேற்புரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆத்மா மனநல மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் ராமகிருஷ்ணன், இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் சமூக ஊடகங்களால் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். மேலும், போதைப் பழக்கத்தால் ஏற்படும் மனநலப் பிரச்சினைகள் மற்றும் தற்கொலை எண்ணங்கள் குறித்தும், அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் விரிவாக்கத் துறையின் துணைத் தலைவர் முனைவர் சாம் தேவ ஆசீர், NCC அலுவலர்கள், சங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் பால் அஜித், முனைவர் இம்மானுவேல், ஷர்மிளா பானு, ரிஸ்வானா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் தற்கொலை எண்ணங்களைத் தடுத்தல், மனநலத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் உரிய நேரத்தில் உதவியை நாடுவதன் அவசியத்தை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

 

Leave A Reply

Your email address will not be published.