“குட்டிகள் பகை – ஆடுகள் எல்லாம் ராசி” – திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தில் நடக்கும் குளறுபடிகள்!
திருச்சி மாவட்ட முன்னாள் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே ராஜாவின் தாயார் திருவுருவப்படம் திறப்பு விழாவிற்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் கலந்துகொண்டு திறந்து வைத்தது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
நடிகர் விஜயின் ஆரம்ப காலத்தில் இருந்தும் ரசிகர் மன்றம் ஆரம்பம் முதலும் தற்போது உள்ள விஜய் மக்கள் இயக்கம் வரை இருந்தவர் ஆர்.கே.ராஜா.
நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரமான எஸ்ஏ சந்திரசேகர், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகின. கட்சியின் தலைவராக திருச்சியை சேர்ந்த ஆர்.கே ராஜா என்ற பத்மநாபன், கட்சியின் பொதுச் செயலாளராக எஸ் ஏ சந்திரசேகர், பொருளாளராக விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
கட்சி பற்றிய செய்தி வெளியாகி சிறிது நேரத்திலேயே தனக்கும் அந்தக் கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும், தனது பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது எனவும் நடிகர் விஜய் அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். தாய் ஷோபாவும் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அப்போது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். விஜய் விஷ வலையில் சிக்கியிருப்பதாக அவரது தந்தை எஸ்.ஏ.சி பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதேநேரம் திடீரென ஆர்.கே ராஜா பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டது விஜய் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் மக்கள் இயக்கத்தின் கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் களங்கம் ஏற்பட்டுத்தும் வகையில் நடந்து கொண்டு இருப்பதாலும் இயக்கக் கட்டுபாட்டை மீறி இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாலும் மேலும் அனைவரின் ஒற்றுமையைச் சீர்குலைக்கின்ற வகையில் தவறான செய்திகளைப் பரப்புவதாலும் தளபதி அவர்களின் ஆணைப்படி திருச்சி மாவட்ட தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார் என்ற அறிவிப்பு கடிதம் தமிழகம் முழுவதும் உள்ள விஜய் இயக்க நிர்வாகிகளுக்கு அனுப்பட்டது.
ஆரம்பத்தில் திருச்சியைச் சேர்ந்த பத்மநாபன் என்ற ஆர்.கே.ராஜா `தான் உயிருக்குப் பயந்து தலைமறைவாக வாழ்ந்துவருவதாகவும், தனக்கோ தனது குடும்பத்தாருக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குக் காரணம் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்தான்’ என்று விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவரான ஆர்.கே.ராஜா வீடியோ வெளியிட்டது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இப்படியே, கொரோனா காலகட்டம் என்பதால் இரண்டு வருடங்கள் உருண்டோடியது. திருச்சியை சேர்ந்த ஆர்கே ராஜா தொடர்ந்து விஜய்யின் ரசிகராக இருந்து வந்தார். அடிக்கடி சென்னை சென்று எஸ்.ஏ.சி – யை சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே ராஜா அவர்களின் தாயார் சமீபத்தில் இயற்கை எய்தினார். இவரது தாயார் திருவுருவப் படத்தை படத்திறப்பு விழா இன்று காலை அவரது இல்லத்தில் படத்தை நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரன் திறந்து வைத்தது பேசு பொருளாகியுள்ளது.
“ஆடு பகையாகவும், குட்டிகள் எல்லாம் ராசியாக உள்ளது” என்ற பழமொழி உள்ளது. ஆனால் திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை பொறுத்தவரை குட்டிகள் எல்லாம் பகையாகவும், ஆடுகள் எல்லாம் ராசியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து அரசியலில் முனைப்பு காட்டி வரும் விஜய் மக்கள் இயக்கம், திருச்சியை பொறுத்தவரை இந்த மாதிரியான அணுகுமுறையை எதிர்கொள்ளும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய….https://chat.whatsapp.com/IFC5JrQzHnf9WurwIfJTIH