பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர் தற்காலிக பணி நீக்கம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு 2019-2020-ம் ஆண்டுக்கான தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு இனங்களில் நிதி மோசடி செய்து சங்க பணம் லட்சக்கணக்கில் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தணிக்கை அதிகாரிகளின் அறிக்கையின் பேரில் அந்த சங்கத்தின் தலைவராக இருந்த அ.தி.மு.க. நிர்வாகி ப.சந்திரசேகரை 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 36-ன் கீழ் எந்த ஒரு பதிவு பெற்ற கூட்டுறவு சங்கத்திலும் பதவி வகிக்க நிரந்தரமாக தகுதியிழப்பு செய்து சென்னை பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை கூடுதல் பால் ஆணையர் ஆணையிட்டுள்ளார். அத்துடன் சங்கத்தின் செயலாளர் முருகேசன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால், அந்த சங்கத்தின் வரவு-செலவை மேற்கொள்ள மணப்பாறை சரக முதுநிலை ஆய்வாளர்(பால்) சு.சுரேந்தர் மற்றும் சங்கத்தின் செயலாளர்(பொறுப்பு) ஏ.மாயழகு ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு வங்கி மூலம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று திருச்சி துணைப்பதிவாளர்(பால்வளம்) எ.ஜெயபாலன் உத்தரவிட்டுள்ளார்.