மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை. மாநகராட்சி, நகராட்சி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட இ-சேவை மையம், நில அளவை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், செயல்படுத்தப்படும் மத்திய அரசின் நிதி சார்ந்த திட்டத்தின் கீழ் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம். தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட செயலாக்கங்கள் குறித்து கண்காணிப்புக் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ஒவ்வொரு திட்டத்தின் கீழ் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு மக்கள் பயன்பெற்றுள்ளனர். திட்டத்திற்கான இலக்கீடு எவ்வளவு, அதில் தற்போதுவரை இலக்கீடு எவ்வளவு எய்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் அவர்களது பகுதியில் உள்ள தேவைகள் குறித்து கண்காணிப்புக் குழு தலைவரிடம் தெரிவித்தனர்.
மேலும்,திட்டப்பணிகளை தரமாகவும் விரைந்து செயல்படுத்தியும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென்று திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சாலை பாதுகாப்புத் தொடர்பான பாராளுமன்ற தொகுதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளையும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான சு.திருநாவுகரசர் வழங்கினார்.