தமிழகத்திற்கு ‘முட்டை’ நிதி! – மத்திய அரசை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு
திருச்சி, பிப்.7 முசிறியில் பரபரப்பு – தமிழகத்திற்கு ‘முட்டை’ நிதி? – மத்திய அரசை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், முசிறி நகரின் பல்வேறு பகுதியில் பொதுமக்கள் நடமாடும் இடங்கள் மற்றும் அரசு அலுவலகத்தின் சுற்று சுவர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் போஸ்டரில் பெரிய அளவில் “முட்டை” படம் அச்சிடப்பட்டு, அதன் மேல் “முட்டை” என்று பெரிய எழுத்துக்களில் எழுதப் பட்டுள்ளது. அதற்கு கீழே, “பாஜக – அதிமுக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி!” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
2026-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்பதையும், தமிழகம் புறக்கணிக்கப்பட்டதையும் மறைமுகமாக தாக்கும் விதமாக “முட்டை” தான் கிடைத்துள்ளது என்பதை வலியுறுத்தும் விதமாக போஸ்டர்கள் ஒட்டி உள்ளது.
இதனை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பார்த்து கடந்து சென்றனர். எந்த அரசியல் கட்சியின் சார்பில் யார் இந்த போஸ்டர்களை ஒட்டியது என்பது குறித்த விபரங்கள் அதில் இடம் பெறவில்லை. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள், முசிறி பகுதியில் இன்று காலை முதல் பேசுபொருளாக மாறியுள்ளது.