ஆக்கிரமிப்பில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் மீட்கப்படும்: கே.வி.தங்கபாலு பேட்டி.
திருச்சி, ஜூலை 5 தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் மீட்கப்படும் – காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழு தலைவர் கே.வி.தங்கபாலு பேட்டி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை தமிழக காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழு தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள ஐஎன்டியூசி தொழிற்சங்க கட்டிடத்தை பார்வையிட்ட அவர் பின்னர் பன்னாங்கொம்பில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அதன் அருகில் கட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்காக கட்சியின் மூத்த முன்னோடிகள் கட்சியை வளர்ப்பதற்காக பல நிலைகளில் சொத்துக்களை வழங்கியுள்ளனர். இந்த சொத்துக்களை பராமரித்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பயன்படுத்த முடிவெடுத்து அதனை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக குழுவாக புறப்பட்டு வந்துள்ளோம். கட்சியின் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அதனை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்வோம்.
மடப்புரம் கோவில் ஊழியர் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது. தவறு எங்கு நடந்தாலும் கண்டிக்கிறோம். தவறுநடக்காத வகையில் பார்க்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம். இச்சம்பவத்தில் சில காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். எதிர்கட்சிகள் என்றால் குற்றச்சாட்டுகள் வைக்கத்தான் செய்வார்கள். எடப்பாடி அரசை விட திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.