மாவட்ட ஆட்சியரின் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்ட அரசு விடுதி மாணவிகள்
திருச்சி, ஜூலை 5 அடிப்படை வசதிகள் கேட்டு திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிட விடுதி மாணவிகள் கைபேசி ஒளியுடன் இரவில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் – மாவட்ட ஆட்சியரின் உறுதியுடன் முடிவுக்கு வந்தது
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆதிதிராவிட மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற காரணத்தால், 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100 மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதியில் வெறும் 4 கழிவறைகள் மற்றும் 4 குளியறைகள் மட்டுமே உள்ளன என்பது முக்கியப் பிரச்சனையாக முன்வைக்கப்பட்டது. காலையில் கல்லூரிக்கு செல்லும் சமயத்தில் மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டத்தின் போது அதிகாரியொருவர் ஒருமையில் பேசியது நிலையை மேலும் பதற்றமாக்க, மாணவிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையில், மாணவிகள் காத்திருப்பு போராட்டத்தைத் தொடர்ந்தனர். பிறகு மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து மாணவிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து, உதாசீனமான செயலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதியதாக சேர்க்கப்பட்ட மாணவிகள் சோமரசம்பேட்டை விடுதியில் தங்கவைக்கப்படுவார்கள் என்றும், போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உறுதியை தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்