ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பள்ளி சிறுவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பண மங்கலம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பள்ளி சிறுவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்.
லால்குடி அருகே வி.துறையூர் பகுதியை சேர்ந்த ராஜா மகன் பிரணவ் (வயது 10), அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரசன்னா ( வயது 10) இவர்கள் இரண்டுபேரும் சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
பள்ளிக்கு சென்ற சிறுவர்களை வி.துறையூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது ஆட்டோவில் அழைத்துக்கொண்டு வந்துள்ளார். அப்போது பிரணவ் சகோதரர் பிரியதர்ஷனும் (வயது 14) தம்பியை அழைத்துவர ஆட்டோவில் வந்துள்ளார்.
சமயபுரம் அருகே உள்ள பளுர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்றுகொண்டிருந்த போது எதிரே அரியலூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது.
இந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற பிரணவ், பிரசன்னா, பிரியதர்ஷன் மற்றும் ஆட்டோ டிரைவர் கார்த்தி ஆகிய 4 பேரும் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்துபலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.