திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் ஓட்டப் பந்தய போட்டி நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் ஏற்பாட்டு செய்திருந்த இந்த போட்டியை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த மாரத்தான் ஓட்டத்தில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ளவர்கள் மட்டுமல்லாது திருச்சி, அரியலூர், கரூர், பெம்பலூர் போன்ற மாவட்டங்களிலிருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலாவது பரிசு ரூ.10 ஆயிரத்தை மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலியை சேர்ந்த பிரகாசும், 2வது பரிசு ரூ.8 ஆயிரத்தை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெங்கராஜும், 3வது பரிசு ரூ.5 ஆயிரத்தை மண்ணச்சநல்லூர் அருகே பிக்சாண்டார்கோயிலைச் சேர்ந்த கார்த்திக்கும் ஆகியோருக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், மண்ணச்சநல்லூர் ஒன்றிய குழு தலைவர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் வி.எஸ்.பி.இளங்கோவன், துணை சேர்மன் செந்தில், மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
