சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி: 668 காளைகள் பங்கேற்றன
திருச்சி, ஜன.17 திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி 668 காளைகள் பங்கேற்றன.
63 பேர் காயம் – வரலாற்றில் முதல் முறையாக முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது
திருச்சி மாவட்டத்தில் முதன்மையான மற்றும் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டி, பெரிய சூரியூரில் தை மாதம் 2 ஆம் நாள் விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை கிராம திடலில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக நிரந்தர மைதானம் அமைத்து தர வேண்டும் என, ஊர் பொதுமக்கள் சார்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்யிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒப்புதலுடன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய ஜல்லிக்கட்டு மைதானம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்து, நேற்று துணை முதல்வர் திறந்து வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்காகவும், பாதுகாப்பு, பார்வையாளர்கள் வசதி, வாடிவாசல், தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன.பார்வையாளர்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிக்க கேலரி கட்டப்பட்டுள்ளது.
இப்போட்டியில் 668 ஜல்லிக்கட்டு காளைகள் 334 மாடுபிடி வீரர்கள் 10 சுற்றுக்களாக திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் களம் கண்டது. மேலும் இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில், முதல் பரிசாக கார், இரண்டாம் பரிசாக டூவீலர் வழங்கப்பட உள்ளது. அதேபோல் களத்தில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் வேஷ்டி, சேலை பரிசாக வழங்கப்பட்டது. 668 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.334 காளையர்கள் களத்தில் இறங்கினர். இதில் 63 பேர் காயமடைந்தனர். போட்டியில் மாட்டின் உரிமையாளர்கள் 26 பேர், மாடுபிடி வீரர்கள் 13 பேர், பார்வையாளர்கள் 22 பேர், 2 காவலர்கள் என மொத்தம் 63 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 13 காளைகளை பிடித்த மூர்த்தி என்ற வாலிபருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக 11 காளை பிடித்த இளைஞர் யோகி என்பவருக்கு இருசக்கர மின்சார வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பரிசை திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி மற்றும் கிராம கமிட்டி நிர்வாகிகள் வழங்கினார்.