பொத்தமேட்டுப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா
திருச்சி, ஜன.19 மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் 700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 18 ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் இன்று ஜல்லிக்கட்டு விழா புனித வியாகுலமாதா தேவாலயத்தின் முன்பு உள்ள திடலில்நேற்று நடைபெற்றது. ஶ்ரீரங்கம் கோட்டாட்சியர் சீனிவாசன் கொடியசைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 700 ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறி வரும் காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களம்கண்டனர். போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் 5 கிலோ அரிசி வழங்கப்படும் நிலையில் போட்டியில் வீரர்களின் பிடிக்கு அடங்க மறுத்து வெற்றி பெறும் காளைகளுக்கும், காளைகளை அடக்கி வெற்றி பெறும் காளையர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பீரோ, கட்டில், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, அண்டா, ரொக்கப்பணம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
200 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜல்லிக்கட்டில் காயமடைபவர்களுக்கு அதே பகுதியில் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னதாக போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளும், மாடுபிடி வீரர்களும் முறையான மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.