புதிய பேருந்து சேவை : சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தொடங்கி வைத்தார்
திருச்சி, ஆக.30 மணப்பாறையில் தொழிலாளர்களுக்காக புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்து பேருந்தை ஓட்டிச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறைமில் இருந்து திருப்பூருக்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கொடியசைத்து துவக்கி வைத்தார். மணப்பாறை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் மனப்பாறைலிருந்து துவரங்குறிச்சி, நத்தம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக திருப்பூர் வரை செல்லும் புதிய பேருந்து சேவையை ரிப்பன் வெட்டியும் கொடியசைத்தும் துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் பின்னர் சிறிது தூரம் தானே பேருந்தை ஓட்டி சென்று பேருந்து பயணத்தை தொடங்கி வைத்தார்.
மணப்பாறை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பணியாற்றிவரும் சூழ்நிலையில் மணப்பாறையில் இருந்து திருப்பூருக்கு பேருந்து இயக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது புதிதாக பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விழாவில் போக்குவரத்துக்கழக மற்றும் நகராட்சி அதிகாரிகள், திமுகவினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.