மணப்பாறை அருகே100 நாள் வேலை கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
திருச்சி, ஜூன். 19 மணப்பாறை அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணிவழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மலையடிப்பட்டி ஊராட்சியில் உள்ள ஆவாரம்பட்டியைச் சேர்ந்த நூறுநாள் திட்ட தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் இந்த ஆண்டிற்கு இதுவரை பணி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. ஒருசிலருக்கு மட்டும் 6 நாட்கள் பணி வழங்கப்பட்ட நிலையில் 4 நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும் இரண்டு நாட்களுக்கு சம்பளம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே ஊராட்சியில் உள்ள பிற பகுதி தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படும் நிலையில் ஆவாரம்பட்டி பகுதி தொழிலாளர்களுக்கு மட்டும் பணி வழங்கப்படாத நிலையில் இன்று காலை 100 பேரை பணிக்கு வரச் சொல்லி தொழிலாளர்கள் கையெழுத்திட்ட பின் பணியில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மலையடிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது அதிகாரிகளுடன் தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பணி வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நூறுநாள் பணியை முறையாக வழங்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.