வீரப்பூரில் யானை வாகனத்தில் சென்று அம்புபோட்ட பெரியக்காண்டி அம்மன் : பக்தர்கள் வழிபாடு
திருச்சி, அக். 3 மணப்பாறை அருகே யானை வாகனத்தில் எழுந்தருளி வாழைமரத்தில் அம்பு போட்ட பெரியக்காண்டி அம்மன். வீரப்பூரில் வேடபரி விழா கோலாகலம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீரப்பூரில் உள்ள பெரியகாண்டியம்மன், பொன்னர் – சங்கர் கோவில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் அண்ணன்மார் சுவாமிகளான பொன்னர் – சங்கர், தங்காள், மகாமுனி, கருப்பண்ணசாமி உட்பட பல வழிபாட்டு தெய்வங்கள் உள்ளன. இக்கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை வேடபரி விழா நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் மாசிப் பெருந்திருவிழாவில் நடைபெறும் வேடபரி நிகழ்ச்சியில் சுவாமிகள் கோவிலில் இருந்து மேற்கு நோக்கிச் சென்று அணியாப்பூரில் அம்பு போடுவது வழக்கம்.
அதேபோல நாட்டில் வேளாண் நிலங்கள் செழிக்கவும், மக்கள் பசி பட்டினி இன்றி வாழவும், பட்டியில் உள்ள ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் நோய்நொடி இல்லாமல் இருக்கவும் கோவிலின் கிழக்கு பகுதிக்கு சென்று அம்புபோடும் நிகழ்வு விஜயதசமி தினத்தன்றும் வேடபரி விழா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டும் மகாநோன்பு என்று அழைக்கப்படும் விஜயதசமி தினமான இன்று இரவு சாம்புவன் காளை முன்செல்ல பின்னே பொன்னர் குதிரைவாகனத்திலும், அதன்பின்னே வெள்ளையானை வாகனத்தில் பெரியக்காண்டியம்மனும் செல்ல அதன்பின்னே தங்காள் தண்ணீர் குடம் சுமந்து சென்று சிறிது தொலைவில் உள்ள வேடபரிக்காடு என்ற இடத்தில் பெரியக்காண்டியம்மன் வாழை மரத்தில் அம்பு போடும் வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த சுவாமிகளின் மீது மக்கள் பூமாலைகளை மழைபோல் தூவி வழிபட்டனர்.
அம்பு போட்ட பின் வாழை மரத்தில் இருந்து வரும் பால் நிலத்தில் வடியும் இந்த மண்னை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்து சென்று தங்கள் நிலங்களில் தூவினால் விளைச்சல் பெருகும் என்பது பக்கத்களின் நம்பிக்கையாக உள்ளது. விழாவில் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.