தேர்தல் வந்துவிட்டதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு
திருச்சி,மார்ச் 2 திருச்சி மாவட்டம், மணப்பாறை மாட்டுச்சந்தை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார்.
முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது,
நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கின்றது. அதனால் தான் பிரதமர் மோடி இப்போது தான் அவ்வபோது வந்து சென்று கொண்டிருக்கிறார். புயல் வெள்ளம் என பாதிப்பின் போது எதற்கும் வராத மோடி. இப்போது அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்கிறார் என்றால் தேர்தல் வந்து விட்டது என்று அர்த்தம்.
மோடி மிரட்டினால் அடிபணிய இது அதிமுக அல்ல. அண்ணாவின் தி.மு.க. அண்ணா உருவாக்கிய தமிழ்நாடு. மோடியின் மிரட்டல் எல்லாம் இங்கு செல்லுபடியாகாது என்று கூறினார்.
கலைஞரின் சிலையை திறந்து வைத்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது, இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறப் போகிறது. காஷ்மீர், டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு இப்படி இந்தியா கூட்டணி அமைந்து விட்டது. தமிழ்நாடு தான் இதற்கு வழிகாட்டுகிறது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி வரப்போகிறது என்று கூறினார்.