வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி பயிற்சி
திருச்சி, அக்.15 திருச்சி மாவட்டத்தில் தமிழ் நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலம் வானவில் மன்றம் அரசு பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித சிந்தனைகளை மேம்படுத்தும் விதமாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 420 நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 23 கருத்தாளர்களை கொண்டு சுமார் 40,000 மாணவ மாணவிகளுக்கு கடந்த 2021 முதல் இத்திட்டதினை செயல்படுத்தி வருகிறது.
நடப்பு கல்வி ஆண்டிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மற்றும் மாதாந்திர ஆய்வுக் கட்டத்துடன் கூடிய ஒரு நாள் பயிற்சி திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் திருச்சி மாவட்ட வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் (அமைப்பு ) அவ.ராஜபாண்டியன் வரவேற்றார். பள்ளிக்கல்வித்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் சுரேஷ் நிகழ்ச்சி ஒருங்கிணைத்து வாழ்த்துரை வழங்கினார். திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வித் துறை உதவி திட்ட அலுவலர் அன்பு சேகரன் தலைமையேற்று கருத்தாளர்களுக்கு செயல்பாட்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொறுப்பாளர் மாணிக்கத்தாய் மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணித மனப்பான்மையை வளர்ப்பது பற்றி கருத்தாளர்களுடன் கலந்துரையாடினார்.
நாச்சம்பட்டி உயர்நிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காளிதாஸ் மற்றும் சுரேஷ் மாவட்ட பயிற்சி கருத்தாளர் இருவரும் கருத்தாளர்களுக்கு கற்றல் உபகரணங்களுடன் கூடிய செயல்பாடுகளை செய்து காட்டி பயிற்சி வழங்கினார். நிகழ்வின் இறுதியாக வானவில் மன்ற கருத்தாளர் பகுத்தறிவன் நன்றி கூறினார்.