குளத்தின் கரை உடைப்பை கண்டித்து பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

0 272
Stalin trichy visit

திருச்சி, பிப்.16 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே டி.உடையாபட்டியில் செங்காட்டுக்குளம் உள்ளது. இந்தகுளம் அப்பகுதி வேளாண் நிலங்களின் பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் இக்குளத்தின் தடுப்பணை அருகே தனிநபர் ஒருவர் குளத்தின் கரையை உடைத்து தனது நிலத்திற்கு பாதை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. கரை‌ உடைக்கப்பட்டதால் குளத்தில் இனி நீர் நிரம்பாது என்பதால் இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் டி.உடையாபட்டியில் உள்ள சிலரது பட்டா இடங்கள் அரசுக்கு சொந்தமான நிலம் என கணினி சிட்டாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் குளத்தின் கரையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அரசு நிலம் என மாற்றம் செய்யப்பட்டுள்ள பொதுமக்களின் இடத்தை மீண்டும் பட்டா உள்ளவர்கள் பெயரிலேயே கணினி சிட்டாவில் மாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி இன்று மாலை மணப்பாறையில் இருந்து வீரப்பூர் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கிராம நிர்வாக அலுவலரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை டி.எஸ்.பி ராமநாதன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சமாதானமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இப்போராட்டத்தில் ஒரு மணி நேரம் காலதாமதமான அரசுப்பேருந்து புறப்பட்டுச் சென்றது.

Leave A Reply

Your email address will not be published.