திருச்சி மாநகர காவல் ஆணையராக ரூபேஷ்குமார் மீனா நியமனம்
திருச்சி அக்.22 திருச்சி மாநகர காவல் ஆணையராக காமினி அதிரடியாக மாற்றப்பட்டு புதிதாக ரூபேஷ்குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு நேற்று பிறப்பித்தது. பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக உள்ள சந்தோஷ்குமார், சிவில் சப்ளை சி.ஐ.டி. ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.சிவில் சப்ளை சி.ஐ.டி. ஐ.ஜி.யாக பணியில் உள்ள ரூபேஷ் குமார் மீனா, திருச்சி மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தற்போது திருச்சி காவல் ஆணையராக பணியாற்றும் காமினி, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவு ஐ.ஜி.யாக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காவல்ஆணையர் ரூபேஷ் குமார் மீனா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். புகழ்பெற்ற டெல்லி ஐ.ஐ.டி. யில் வேதியியல் பொறியியல் பட்டம் பெற்ற இவர், 2004ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஏற்கெனவே திருச்சி மாநகர துணை ஆணையராகவும், ராமநாதபுரம், தஞ்சை, திண்டுக்கல் சரக டி ஐ.ஜி.யாகவும், நெல்லை மாநகர காவல் ஆணையராகவும் ரூபேஷ் குமார் மீனா பணியாற்றி உள்ளார். அத்துடன் சிறந்த சேவைக்கான குடியரசு தலைவரின் காவல் பதக் கத்தை கடந்த 2024 ஆம் ஆண்டு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.