வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்
திருச்சி, டிச. 30 மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து முறைகேடாக கடத்தி வரப்பட்ட 2, 447 ஆமைக் குஞ்சுகளை சுங்கத்துறையினர் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு, பேட்டிக் ஏர்வேஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர்.
இதில், பயணியொருவர் தனது உடைமைகளுக்குள் 8 சாக்லேட் மற்றும் பிஸ்கட் வைக்கும் பெரிய டப்பாக்களில் மறைத்து, 2, 447 ஆமைக் குஞ்சுகளை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. அவற்றை வெளிநாட்டிலிருந்து கொண்டு வருவதற்கான அனுமதி கிடையாது.
இதனையடுத்து அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து பயணியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது, வன உயிரினம் என்பதால், இது தொடர்பாக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றை திருப்பி மலேசியாவுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.