சஞ்சீவி நகர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு : தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
திருச்சி, ஏப். 8 திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பாலத்துடன் சர்வீஸ் சாலை சப்வே அமைக்க ரூ.40 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாகத் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். அதன் ஒரு பகுதியாக, பனையக்குறிச்சி பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது மக்களிடையே அவர் பேசியதாவது: வாக்குறுதிகளும் வளர்ச்சித் திட்டங்களும் கடந்த 2016 முதல் 2021 வரை எதிர்க்கட்சியாக இருந்தபோது, நிதி நெருக்கடி மற்றும் அதிகார வரம்பிற்குட்பட்டு 10-ல் 3 வாக்குறுதிகளை மட்டுமே எங்களால் நிறைவேற்ற முடிந்தது. ஆனால், தற்போது ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்ற பிறகு, சொன்ன 10 வாக்குறுதிகளில் 7- அய் நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள 3 திட்டங்களையும் வெற்றி பெற்ற பிறகு முழுமையாகச் செய்து முடிப்போம். குறிப்பாக, பனையக்குறிச்சி பகுதியில் ரூ.89.82 லட்சம் மதிப்பில் சாலை வசதி, ரூ.20 லட்சத்தில் சமுதாயக்கூட, ரூ.40 லட்சம் மதிப்பில் பள்ளிக்கூடம், ரூ.20 லட்சத்ல் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி என மொத்தம் ரூ.3.11 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சஞ்சீவி நகர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, சஞ்சீவி நகர் பகுதி போக்குவரத்துப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்காக ரூ.40 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அனுமதி கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதற்கான டெண்டர் (ஒப்பந்தம்) விரைவில் விடப்படும். விடியல் பயணம் (மகளிர் இலவசப் பேருந்து), புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் என முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை தற்போது ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இது அடுத்த கட்டமாக ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் இத்திட்டத்தைத் தடுக்க முயன்றபோது, அதனை முன்கூட்டியே அறிந்து மக்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்து கொடுத்துள்ளது
2016 இல் சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், 2021-ல் சுமார் 49 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். வரும் 2026 தேர்தலிலும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, சேவகனாகப் பணியாற்றும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். முன்னதாக பனையக்குறிச்சி பகுதிக்கு வருகை தந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு, தாரை தப்பட்டை முழங்க, மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சாரத்தின் போது திருவெறும்பூர் தலைமை செயற்குழு உறுப்பினர் . சேகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, கழக நிர்வாகிகள் ரமேஷ் மகாதேவன் சண்முகம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி திலீபன், ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.