மணப்பாறையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, செப்.6 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் எனும் சிறப்புத் திட்டத்தினை 02.08.2025 அன்று தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று (06.09.2025) திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், பண்ணாங்கொம்பு அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட பல்துறை உயர்சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் நேரில் பார்வையிட்டு அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, பயனாளிகளுக்கு பல்வேறு சுகாதார நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
திருச்சி மாவட்டத்தில் இம்மருத்துவ முகாம்கள் 14 வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 42 முகாம்கள் ஊரகப் பகுதிகளிலும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 4 முகாம்கள் என மொத்தம் 46 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும்.
இம்முகாம்களில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கியப் பரிசோதனைகளும் (உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்-ரே), காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், 15 துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும் (பொது மருத்துவம் கண்கள் காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், ஆயுஸ் மருத்துவம், மனநல மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் இருதய நிபுணர், எலும்பு முறிவு, நாம்பியல் சிகிச்சை, முதல்வர் காப்பீட்டுத்திட்டம் மற்றும் இதயவியல் உள்ளிட்ட துறைகள்) வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வின் போது ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர்சீனிவாசன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.எஸ்.குமரவேல், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு.கோபிநாத், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஹேமசந்த் காந்தி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.