தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் காணொளி காட்சி மூலம் திறப்பு
திருச்சி, ஆக.22 முசிறி அருகே ரூ 3 கோடியே 68 லட்சம் செலவில் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் போதிய வசதி இல்லாமல் இருந்த நிலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு அமைச்சர் கே.என்.நேரு பரிந்துரையின் பேரில் ரூ 3 கோடியே 67 லட்சத்தி 72 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தது. இரண்டு அடுக்குகளுடன் கூட்ட மன்றம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வந்த கட்டிட பணிகள் முடிவடைந்தது. இன்று சென்னையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று காணொளி காட்சி வாயிலாக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதையடுத்து தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முசிறி ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் மகாதேவன், தாபேட்டை ஒன்றிய ஆணையர்கள் அந்தோணிதாஸ், சந்திரசேகர், பொறியாளர்கள் பரணிதரன், நித்யா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் முன்னிலையில் குத்து விளக்கு ஏற்றி விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.