தென்னூர் அம்மா உணவகத்தை அகற்றவோ, சிறியதாக்கவோ கூடாது: மாநகராட்சி ஆணையரிடம் அதிமுகவினர் மனு
திருச்சி, டிச.12 திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னூர் அண்ணாநகர் சிவப்பிரகாசம் சாலை, உழவர்சந்தை மைதானம் அருகில் அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், ஜெயலலிதா அவர்களால் துவங்கப்பட்ட அம்மா உணவகம் இன்று வரை ஏழை எளிய மக்களின் பசியினை தீர்ப்பதற்காக திறக்கப்பட்டு ஆதரவற்றவர்கள், கூலித்தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால் தற்போதைய தி.மு.க ஆட்சியில் திருச்சி மாநகராட்சி குறிப்பாக உழவர் சந்தை அருகே உள்ள அம்மா உணவகத்தை அகற்றி சிறியதாக்கி அதற்கு பின்புறம் புதிதாக அமையவுள்ள மனமகிழ் மன்றத்திற்காக (SPORTS CLUB) பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் பரவியது.
இதனையடுத்து திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட மாநகராட்சி ஆணையர் மதுபாலன், அம்மா உணவகத்தை அகற்றவோ, சிறியதாக்கவோ மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அம்மா உணவகம் பின்புறம் வர இருக்கும் மனமகிழ் மன்றத்திற்கு (SPORTS CLUB) பாதை அமைப்பதற்காக அம்மா உணவகத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, மீண்டும் மறுபக்கம் அம்மா உணவகத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் அதே அளவு மீண்டும் கட்டிக் கொடுக்கப்படும் என உறுதி அளித்தார்.