துறையூர் தொகுதி காங்கிரஸிற்கு ஒதுக்கீடு: திமுகவினர் அண்ணா சிலை அருகே திரண்டு போராட்டம்!

0 66
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 28  துறையூர் தொகுதி காங்கிரஸிற்கு ஒதுக்கீடு: திமுகவினர் அண்ணா சிலை அருகே திரண்டு போராட்டம்!

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய திமுக தலைமையின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூர் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், துறையூர் தனித் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, துறையூர் தொகுதி திமுகவினர் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, துறையூர் அண்ணா சிலை முன்பாக திரண்ட திமுக நிர்வாகிகள், நகர மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, “துறையூர் தொகுதி திமுகவிற்கே!”, “உள்ளூர் உணர்வுகளுக்கு மதிப்பளி!” போன்ற கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”மாவட்ட சேர்மன், நகரச் செயலாளர் மற்றும் ஒன்றியச் செயலாளர்களிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல், தன்னிச்சையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்காமல், தலைமையிடம் தவறான தகவல்களைக் கொடுத்து இந்தத் தொகுதியை காங்கிரஸிற்கு ஒதுக்க வழிவகை செய்துள்ளனர். இது அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பை அவமதிக்கும் செயலாகும்.”

துறையூர் தொகுதியில் திமுக பலமாக உள்ள சூழலில், அதனை மீண்டும் திமுகவே தன்வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், வேட்பாளர் தேர்வில் உள்ளூர் விருப்பத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த முடிவை தலைமை உடனடியாக மறுபரிசீலனை செய்யாவிட்டால், அடுத்தகட்டப் போராட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தத் திடீர் போராட்டத்தால் துறையூர் அண்ணா சிலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Leave A Reply

Your email address will not be published.