மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
திருச்சி, பிப். 14 திருச்சி மாநகராட்சி மைய அலுவலக முன்பாக, பாஜகவை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் ஓராண்டுக்கு முன்பே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.
தேர்தலுக்காக கூட்டணிக்குள்ளே இணைவது, தொகுதிகளை பங்கீட்டுக்கொள்வது என அரசியல் கட்சியினர், ரகசியமாகவும், வெளிப்படையாகவும் நடத்திய பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்தக் கூட்டணியை மேலும் வலுப்படுத்த பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பல்வேறு கட்சிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழக அரசியலில் முக்கிய நகர்வுகளை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (13-ம் தேதி) இரவு டில்லியில் இருந்து இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானத்தில் திருச்சிக்கு வந்துசேர்ந்தார்.
அவருடன், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறைகளின் இணை அமைச்சர் எல்.முருகன் வந்து, திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இரவு தங்கி ஓய்வெடுத்தனர்.
இதையடுத்து, இன்று (பிப்.14) காலை 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அமித் ஷா காரைக்கால் பயணிக்கவுள்ளார். அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் மற்றும் புதுச்சேரி மாநில தேர்தல் பூத் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்று பேசவுள்ளார்.
தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளை கொடுத்த பின்னர், இன்று மாலை 5.30 மணிக்கு திருச்சியில் இருந்து அமித் ஷா மீண்டும் டெல்லிக்கு பயணிக்கவுள்ளார்.