பட்டா பெயர் மாற்ற லஞ்சம் பெற்ற வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
திருச்சி, மே 29 திருச்சி மாவட்டம் , மணப்பாறை வட்டம், ஆனாங்கரைப்பட்டி, குமரவாடி கிராமம், சங்கிலிகருப்பன், என்பவர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2000/- கையூட்டு கேட்டு பெற்ற வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திருச்சி, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
திருச்சி மாவட்டம் , மணப்பாறை வட்டம், ஆனாங்கரைப்பட்டி, குமரவாடி கிராமம், சங்கிலிகருப்பன் என்பவரின் மனைவி பஞ்சகல்யாணி இறந்துவிட்டார். அவர் பெயரில் இருந்த சொத்துகளை தனது பெயரிலும், தனது மகன்கள் பெயரிலும் பட்டா பெயர் மாற்றம் செய்து தர ரூ.2000/- கையூட்டாக கேட்டது தொடர்பாக திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, குமரவாடி கிராம நிர்வாக அலுவலர் சாமிக்கண்ணு என்பவர் மீது திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி ஊ.த.க பிரிவில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மேற்கொண்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் சங்கிலிகருப்பனிடம் கையூட்டு பணம் ரூ.2,000/-ஐ கேட்டு பெற்ற போது சாமிக்கண்ணு திருச்சி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.
மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று இன்று 29.05.2026 திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு , திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா குமரவாடி கிராமம், கிராம நிர்வாக அலுவலர், சாமிக்கண்ணு, என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய கையூட்டு கேட்டு பெற்ற குற்றத்திற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனையும், சட்டப்படியான தனது கடமையை செய்வதற்கு மேற்படி லஞ்சப்பணம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5000/- அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மூன்று மா சிறைதண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
மேற்படி வழக்கினை திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர், சேவியர் ராணி, திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞராக கோபிகண்ணன் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.