மணப்பாறை அருகே ஊர் பெயரில் உள்ள “காலனி” என்ற சொல்லை நீக்க கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

0 20
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 6  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஊர் பெயரில் இருந்து “காலனி” என்ற சொல்லை நீக்க வேண்டும் என, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட F.கீழையூர் கிராம மக்கள், தங்கள் ஊர் பெயருடன் சேர்க்கப்பட்டுள்ள ‘காலனி’ என்ற சொல்லை நீக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் இன்று மனு அளித்தனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்:–

மணப்பாறை ஒன்றியத்தைச் சேர்ந்த F.கீழையூர் கிராமத்தில் பல தலைமுறைகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வரலாற்று ரீதியாகவும், அரசு ஆவணங்களின்படியும் இந்த ஊரின் பெயர் F.கீழையூர் என்று மட்டுமே உள்ளது. ஆனால், காலப்போக்கில் திட்டமிட்டு ஒரு சிலரால் F.கீழையூர் காலனி என்று பெயர் மாற்றப்பட்டு அழைக்கப்பட்டு வருகிறது.

ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளைப் புதுப்பிக்கும் போது, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களின் கவனக்குறைவால், முறையான ஆய்வு செய்யாமல் ஆவணங்களில் F.கீழையூர் காலனி என்று தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. படிக்காத மற்றும் விவரம் தெரியாத மக்கள் அதை அப்படியே பெற்றுக்கொண்டதால், இந்தத் தவறு ஆவணங்களில் நிலைபெற்றுவிட்டது.

காலனி என்ற சொல் சாதிய அடையாளமாக மாற்றப்பட்டு, சமூக ரீதியாக தங்களை இழிவுபடுத்தும் விதமாகப் பயன்படுத்தப்படுகிறது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கு செல்லும் போது கூட, “காலனி ஆட்கள்” என்று பாகுபாட்டுடன் நடத்தப்படுவதால், வேலை வாய்ப்பு பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மேலும் அரசின் நலத்திட்ட உதவிகள், குடிநீர் தொட்டி அமைத்தல், தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் வரும்போது, அருகில் உள்ள அரியாகவுண்டம்பட்டியில் வசிக்கும் உயர் சாதியினர், F.கீழையூர் கிராமம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறி, திட்டங்களை அவர்கள் ஊருக்கு மாற்றிக் கொள்கின்றனர். இதனால், எங்கள் கிராம மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்து நிற்கின்றனர்.

இது தொடர்பாக மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்களது ஊர் பெயரில் இருந்து காலனி என்ற சொல்லை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.