ஓய்வு பெற்ற தாசில்தார் கொலை வழக்கில் தந்தை – மகன் உள்பட 3 பேர் கைது
திருச்சி,நவ.8 திருச்சி ஓய்வு தாசில்தார் கொலை குற்றவாளிகள் தந்தை மற்றும் இரண்டு மகன் உட்பட மூன்று பேர் கைது
திருச்சி மாவட்டம் தாயனூர் மேல தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் சுப்பிரமணி நேற்று முன்தினம் வயல்காட்டில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம் உத்தரவின்பேரில் ஜீயபுரம் துணைக் கண்காணிப்பாளர் DSP கதிரவன், சோமரசம்பேட்டை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி – தோகைமலை மெயின் ரோட்டில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது மருளாளி அசோக்குமார் அவரது மகன்கள் தமிழ்செல்வன், சூர்யா ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர்.
அப்போது அசோக்குமார், சூர்யா இருவரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறும்போது..
தாயனூர் உயர்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள குஞ்சாயி அம்மன் கோயில் நிலத்தில் நானும் (அசோக்குமார்), சுப்பிரமணியும் சாகுபடி செய்து வருகிறோம். இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து எனது வயலுக்கு தண்ணீர் திறந்து விட்டு சென்றதை சுப்பிரமணி வாய்க்கால் நீரை எனது வயலுக்கு செல்ல விடாமல் கருங்கற்களால் அடைத்து வந்தார். இதை நான் தட்டி கேட்ட போது சுப்பிரமணி என்னை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்தார். இதையறிந்த எனது மகன்கள் தமிழ்செல்வன், சூர்யா இருவரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதில் ஆத்திரமடைந்த நான், என்னிடமிருந்த மண்வெட்டியை எடுத்து சுப்பிரமணி தலையில் வெட்டினேன். சூர்யா வைத்திருந்த வீச்சு அரிவாள், தமிழ்செல்வன் வைத்திருந்த கத்தியால் சுப்பிரமணி தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து மூவரும் பைக்கில் தப்பி சென்றோம், என்றனர்.