மணப்பாறையில் காரில் கடத்தப்பட்ட 85 கிலோ கஞ்சா பறிமுதல்

0 112
Stalin trichy visit

திருச்சி, நவ.3  மணப்பாறையில் சொகுசு காரில் கடத்தப்பட்ட 85 கிலோ கஞ்சா பறிமுதல்.
காரை 2. கி.மீ., தூரம் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த காவலர். நான்கு பேர் தப்பியோட்டம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை, விராலிமலை சாலையில் திருச்சி மாவட்ட எல்லை அருகே போக்குவரத்து காவல்துறை காவல் உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் காவலர் தினேஷ் ஆகியோர்  நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விராலிமலையிலிருந்து மணப்பாறை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு சொகுசு காரை நிறுத்தியபோது காரின் ஓட்டுநர் காரை ஓரமாக நிறுத்துவது போல் நடித்து திடீரென வேகமாக கிளம்பி அங்கிருந்து சென்றுள்ளார். சந்தேகமடைந்த காவலர் தினேஷ் தனது இருசக்கர வாகனத்தில் காரை 2 கிலோமீட்டர் பின்தொடர்ந்து துரத்திச் சென்று சேதுரெத்தினபுரம் பிரிவு சாலை அருகே காரை மடக்கியுள்ளனர்.

இந்நிலையில் காரில் இருந்த நான்கு பேரும் காரை நிறுத்திவிட்டு ஆளுக்கொரு திசையில் தப்பியோடியுள்ளனர். பின்னர் போலீசார் காரை திறந்து பார்த்தபோது அதில் பிளாஸ்டிக் டேப்பால் சுற்றப்பட்ட 40 க்கும் மேற்பட்ட தனித்தனி பண்டல்கள் இருப்பது தெரியவந்ததால் காரை காவல்நிலையம் எடுத்துச்சென்றனர்‌. அங்கு டி.எஸ்.பி., காவியா பண்டல்களை பிரித்து பார்த்தபோது அவையனைத்தும் கஞ்சா என்பது தெரியவந்தது. 42 பண்டல்களில் மொத்தம் 85 கிலோ இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு காரின் உள்ளே நான்கு வெவ்வேறு பதிவு எண்கள் கொண்ட நம்பர் பிளேட்கள் இருந்தன. இதனால் காரின் பதிவு எண்ணும் போலியானது எனவும் கண்டுபிடித்தனர். இதனையடுத்து தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தப்பியோடியவர்கள்‌ யார் எங்கிருந்து எங்கே யாருக்காக கஞ்சா கொண்டு செல்லப்பட்டது எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா கடத்தல் சொகுசு காரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திச் சென்று பிடித்த போக்குவரத்து காவலர் தினேசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் இச்சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.