திருச்சி மாநகரில் பசுமை காய்கறிகளை வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்யும் திட்டம்!
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு விவசாயிகள் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்பவர்களாக மட்டுமல்லாமல், தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்களின்றி நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உழவர்சந்தைத் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கு காலங்களில் நடமாடும் வாகனங்கள்
மூலம் காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக வீட்டிற்கே விற்பனை செய்த முயற்சி நுகர்வோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் அடுத்த கட்டமாக இச்சேவையை விரிவுபடுத்த சென்னை, திருச்சி, கோயம்புத்தூர்,
சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் விவசாயிகளின் தோட்டத்தில் சாகுபடியாகும் காய்கறிகள் மற்றும் பழங்களை பசுமை மாறாமல் நுகர்வோருக்கு வீடு தோறும் வழங்கிட ஏதுவாக பண்ணையில் இருந்து வீட்டிற்கு (Farm to Home ) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தில் கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு நடமாடும் வாகனங்கள் வாங்குவதற்காக 40 சதவீதம் மானியம் அல்லது ரூ.2 லட்சம் நிதி உதவி அரசு மூலம் வழங்கப்படும். திருச்சி மாநகராட்சியில் 6 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்
விளைபொருட்களுக்கு விற்பனை விலை அருகிலுள்ள உழவர்சந்தை விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் வாகனங்கள் வாங்குவதற்கான மானியம் பெற பயனாளிகள் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மூலம் தெரிவு செய்யப்படுவர். இத்திட்டம் மூலம் நடமாடும் வாகனங்களுக்கான மானியம் பெற வரையறுக்கப்பட்ட தகுதிகள் : 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், 21 வயது முதல் 45 வயது வரை உள்ள இளம் விவசாயிகள், சொந்த அல்லது குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் நில உடமைச் சான்று, சிட்டா, அடங்கல்,
ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் சமர்ப்பிக்க வேண்டும். பயனாளிகளுக்கு ஒரு வாகனத்திற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். மேற்காணும் தகுதியுடைய ஆர்வமுள்ள விவசாயிகள் இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தினை மாவட்ட துணை இயக்குநர் ( வேளாண் வணிகம் ) , மன்னார்புரம் , திருச்சி அலுவலகத்தில்
பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 11-ந் தேதிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு திருச்சி அலுவலக தொலைபேசி எண் : 0431-2422142 மூலம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் ( வேளாண் வணிகம் ) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கே.கே.நகர் , அண்ணாநகர் உழவர் சந்தை அலுவலர்களை நேரடியாக தொடர்பு கொண்டும் பயன் அடையலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.