வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்ப பெறக்கோரி திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கருப்பு கொடியுடன் அரைநிர்வாண போராட்டம்
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொண்டு 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 6 மாதங்களாக (180 நாட்கள்) குளிரிலும், மழையிலும், வெயிலிலும் போராடி வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்ற பல விவசாயிகள் இறந்துள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு விவசாயிகளுடன் அரசு நடத்திய பல சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் மோடி அரசு பதவியேற்ற நாளான இன்று (மே 26) கருப்பு நாளாக அறிவித்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற மறுக்கும் மத்திய மோடி அரசை கண்டித்து கருப்பு கொடியுடன் திருச்சி கரூர் பைபாஸ் சாலையை மறித்து போராட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர் மேகராஜன், மாவட்ட செயலாளர் சிவகுமார், மாநிலஇணை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள் செல்வம், சதாசிவம், குணசேகரன், லோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.